பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை
சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.
மேலும், அதே மருத்துவமனையில் ரூ.40.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் கட்டட கட்டுமான பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக 2023-இல் நடத்தப்பட்ட பன்னாட்டு மாரத்தான் நிகழ்ச்சியின் மூலம் பதிவுத் தொகை ரூ.3.42 கோடி கிடைக்கப் பெற்றது. இந்தத் தொகை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக அரசு பங்களிப்பு நிதி ரூ.6.85 கோடி என மொத்தம் ரூ.10.27 கோடியில் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 62,700 சதுர அடி கொண்ட அந்தக் கட்டடத்தில் தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் உள்ளன. தரைத்தளத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, முதல் தளத்தில் உள்நோயாளிகள் பிரிவு, இரண்டாம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கங்கள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் கட்டுமானம் நடைபெறுகிறது.
இதைத் தவிர, ரூ.40.50 கோடியில் கூடுதலாக மருத்துவ கட்டடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஆயிஷா ஷாகிம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.