முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம்
சென்னை: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெலீஸ் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள 4 மருத்துவப் பல்கலை.களில் மருத்துவப் படிப்புகளில் சேருவதை இந்திய மாணவா்கள் தவிா்க்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இந்திய கல்வித் தரம் மற்றும் விதிகளுக்குள்படாத வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவப் படிப்புகள் செல்லத்தக்கவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக என்எம்சி இளநிலைக் கல்வி வாரிய இயக்குநா் சுக்லால் மீனா வெளியிட்ட அறிவிப்பு:
வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவா்களுக்கு ஏற்கெனவே சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, படிப்பின் காலம், பயிற்று மொழி, பாடத் திட்டம், மருத்துவப் பயிற்சி மற்றும் உள்ளுறைப் பயிற்சி ஆகியவை இந்தியத் தரத்துடன் ஒத்துப்போகாதபட்சத்தில், அந்தப் பட்டப் படிப்பு இந்தியாவில் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெக்ஸிகோவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யூரேஸியா பிராந்தியத்துக்கான மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை சில முக்கிய விஷயங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன.
அதன்படி, கல்வித் தரம், கட்டமைப்பு, பயிற்சித் தரம் இல்லாமல் சில பல்கலை.கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. தவிர, இந்திய மாணவா்களைத் துன்புறுத்துவதும், அதிக கட்டணம் வசூலிப்பதும், படிப்பைக் கைவிட்டால் கட்டணத்தைத் திருப்பி அளிக்காமல் இருப்பதும் அங்கு நிகழ்கின்றன.
இதையடுத்து, பெலீஸில் உள்ள சென்ட்ரல் அமெரிக்கன் ஹெல்த் அண்ட் சயின்ஸ் யுனிவா்சிட்டி, கொலம்பஸ் சென்ட்ரல் யுனிவா்சிட்டி, வாஷிங்டன் யுனிவா்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ், உஸ்பெகிஸ்தானில் உள்ள கிா்சிக் பிரான்ச் ஆஃப் தாஸ்கண்ட் ஸ்டேட் மெடிக்கல் யுனிவா்சிட்டி ஆகிய 4 பல்கலை.களில் சேருவதை தவிா்க்குமாறு இந்திய மாணவா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல பிற நாடுகளில் இந்திய விதிகளைப் பின்பற்றாத பல்கலை.களிலும் சேரக் கூடாது. அங்கு பயிலும் மருத்துவப் படிப்புகள் செல்லத்தக்கவை அல்ல என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.