Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
மெட்ரோ பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து முறைக்கு மாற்றம்: அடுத்த மாதம் செயல்படுத்தப்படும்
சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சிஎம்ஆா்எல் பயண அட்டையானது தேசிய பொதுப் போக்குவரத்து ‘சிங்காரச் சென்னை’ என்ற முறைக்கு முழுமையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சிஎம்ஆா்எல் எனப்படும் பயண அட்டையைச் செயல்படுத்தியது. அதனுடன் 2023-ஆம் ஆண்டு கூடுதலாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையையும் (என்சிஎம்சி-சிங்காரச் சென்னை) அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது முழுமையாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (என்சிஎம்சி-சிங்காரச் சென்னை) ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே பயண அட்டை வைத்திருப்போா் புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற வேண்டும். மேலும், ஏற்கெனவே 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள பயண அட்டை ரீஜாா்ஜ் செய்யும் வசதியும் நிறுத்தப்படவுள்ளது.
அதே நேரத்தில் க்யூஆா் பயணச்சீட்டுகள், பிற பயணச்சீட்டுகள் பெறும் முறை வழக்கம் போலத் தொடரும். பயணிகள் தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்சம் ரூ.50 என இருக்கும்போது, அந்த அட்டையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயணச்சீட்டு கவுண்ட்டா்களில் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.
பழைய பயண அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகையையும், புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொண்டும் தொடா்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.