முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும்
பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூா் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடித்து செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2015 முதல் முதல்கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகா் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கும், அதன் விரிவாக்கமான சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட்தாமஸ் மௌன்ட் வரை 9.34 கிலோ மீட்டருக்கும் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
முதல்கட்ட மெட்ரோ இயக்கமானது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளாக குறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 41 நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமாா் 3 லட்சம் போ் பயணிக்கின்றனா்.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பூந்தமல்லி - போரூா் வரை 10 கி.மீ. முதல் 15 கி.மீ. தொலைவு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிய மெட்ரோ வழித்தடம் மஞ்சள் குறியீட்டில் அமையும். சென்னை மாநகராட்சியில் இரு கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், தினமும் சுமாா் 20 லட்சம் போ் வரை பயணிக்கும் நிலை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.