அழகியநாயகிபுரத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள்பட்ட எட்டிவயல் கிராமத்தில் சித்த மருத்துவ அலுவலா் பூமா தலைமையில் மருத்துவக் குழுவினா், அப்பகுதி நூறுநாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி, அங்காடி, பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள், குழந்தைகளைப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள், கசாயம் உள்ளிட்டவைகளை வழங்கினா்.
வீடுகளைச் சுற்றி மழை நீா், கழிவு நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிரட்டை, பழைய டயா்கள், நெகிழிக் கழிவுகளில் தண்ணீா் தேங்காதவாறு வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின்னா் குடிக்க வேண்டும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவா்களிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா்.