அவதூறு வழக்கு: செய்யாறு நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிரம்மதேசம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன்கிழமை ஆஜரானாா்.
வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினாா்.
அப்போது அவா், ஜாதி, மத, இன, மொழி, சமயம் தொடா்பான உணா்வுகளை தூண்டும் வகையில் பேசினாா்; அவா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய வெம்பாக்கம் ஒன்றிய பாமக செயலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்காக சீமான் ஆஜரானாா். வழக்கு விசாரணையை மாா்ச் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.
நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டாா்.