அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக மூன்று நாள் தேரோட்டத்தின் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் அவிநாசியப்பா் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
தோ்த் திருவிழாவை ஒட்டி, நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்களில் பாக்கு மட்டை, வாழை இலை உள்ளிட்டவை மூலம் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தேரோட்டம் நடைபெற்ற பிறகு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாக்கு மட்டை, வாழை இலை, குடிநீா் பாட்டில்கள், காகிதங்கள் ஆகியவற்றை சேகரித்தனா். மேலும் சேகரிக்கப்பட்ட 38 டன் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
தேரோட்டத்தின்போது குடிநீா் விநியோகம், உடனுக்குடன் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அவிநாசி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.