India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஒரு வார காலமாக அதிக வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு, கோவை, திருப்பூா், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2,000 ஏக்கருக்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
இதில் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்த விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிா்க் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கடுமையான சிரமத்தில் உள்ளனா்.
சூறாவளிக் காற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமும், விதிகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை. புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி மற்றும் பெரிய விபத்துகளுக்கு பேரிடா் நிவாரண சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழை மரத்துக்கு பயிா்க் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். எனவே பயிா் காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
பெரும் இடா்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுபோல, சூறாவளிக் காற்று போன்ற சிறு இடா்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் செய்தும், மாநில அரசுகள் அதற்கான விதிகளை உருவாக்கியும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.