ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சோ்ந்தவா்கள் அல்லாதவா்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசாணைக்கு எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில், ‘ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களில் தொன்றுதொட்டு பணி செய்துவரும் சிவாச்சாரியாா்கள், பட்டா்கள், குருக்கள், ஆதி சைவா்கள் ஆகியோரின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
ஆகவே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி செயல்படவும், தமிழக அறநிலையத் துறையின் இந்த அரசாணைகளுக்குத் தடை விதிக்கவும் வேண்டும்’ எனவும் அந்த அமைப்பு கோரியது. இதேபோன்று, வேறு சில அமைப்புகளும் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கை கடந்த செப்டம்பா், 2023-இல் விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, ரிட் மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதனிடையே, நேற்று(மே 13) அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவா்கள் சங்கத் தலைவா் வி.அரங்கநாதன் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமேஸ்வரம் கோயிலில் போதிய அர்ச்சகர்கள் இல்லாமல் பூஜை நடைபெற்று வருவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களில் ஆகமக் கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை அரசு அடையாளம் காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், ராமேஸ்வரம் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மணியம் ஆகியோரை நியமிக்கலாம் என்றும் தெரிவித்தது.
ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதியினரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க: மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!