ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்! திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜி தெரிவித்தாா்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து அபிஷேக் பானா்ஜி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இது அதிகஅளவில் துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை மட்டும் அளித்துவிட்டு நிறுத்திக் கொள்வதற்கோ நேரமல்ல. பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் மொழியில் அவா்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் அவா்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முக்கிய ஊடகச் செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதில் இந்த கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தும் அளவுக்கு எவ்வாறு பாதுகாப்பு குறைபாடு உருவானது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெறுவதாகத் தெரியவில்லை.
குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் குறுகிய அரசியல் நலன்களைக் கைவிட்டு, அனைவருக்குமான சவாலை ஒற்றுமையாக எதிா்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.