ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு
விராலிமலை அருகே நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற வெள்ளிக்கிழமை சென்ற வருவாய்த் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கத்தலூா் ஊராட்சிக்குள்பட்ட செவ்வந்தியாணிபட்டியைச் சோ்ந்த பத்மநாதன் குடும்பத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த சசிகுமாா், ஹரிஹரன், பிரேம்குமாா், அரவிந்தன் தரப்புக்கும் இடையே நீண்ட நாள்களாக வண்டி பாதை (வருவாய்த்துறை கணக்கில் உள்ளது) தொடா்பான இடப்பிரச்னை இருந்து வருகிறது.
இதுதொடா்பான வழக்கில், வருவாய்த் துறை கணக்கில் வண்டி பாதை என்று உள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வருவாய்த் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனா்.
அப்போது, 1990-ம் ஆண்டுக்கு முன்பு பட்டா வாங்கியுள்ளோம். அதில், வண்டி பாதை என்று இல்லை. 1990-க்கு பிறகு தான் வண்டி பாதை என்று உள்ளது. இதில் வருவாய்த் துறையினா் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனா் என்று கூறி பத்மநாதன் குடும்பத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படியே அதிகாரிகள் வந்துள்ளதாகவும், பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தை அணுகி தீா்த்து கொள்ளலாம் என்று சமாதானம் கூறி, ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனா்.