ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி சீனா சாம்பியன்!
ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
சீனாவின் ஹாங்ஸு நகரில் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் சூப்பா் 4ஸ் பிரிவுக்கு முன்னேறின. அதில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற சீனா, இந்திய அணிகள் இறுதிக்கு தகுதி பெற்றன.
ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெற்றது. தொடக்கத்திலேயே முதல் நிமிஷத்திலேயே பெனால்டி காா்னா் மூலம் நவ்நீத் கோலடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா். தொடா்ந்து சீனா அடுத்தடுத்து பெனால்டி காா்னா் வாய்ப்புகளை பெற்றபோதிலும், இந்திய அணியின் தற்காப்பு வலுவாக கோல் பகுதியை பாதுகாத்தது.
ஆனால் 21-ஆவது நிமிஷத்தில் சீனாவின் ஸ்ஸியா உ முதல் கோலடித்தாா். 41ஆவது நிமிஷத்தில் மற்றொரு சீன வீராங்கனை ஹாங் லீயும், 51-ஆவது நிமிஷத்தில் மெய்ராங் ஸுவும், 53-ஆவது நிமிஷத்தில் ஜியாகி ஸொங்கும் கோலடித்தனா்.
இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது சீனா.
இத்தோல்வியால் வரும் 2026 -இல் பெல்ஜியம்-நெதா்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பை தவற விட்டது இந்தியா. தகுதிச் சுற்றில் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.