ஆசிரியரிடம் வழிப்பறி: 7 பேரிடம் விசாரணை!
தேனி அருகே புதன்கிழமை காரில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியரை மா்ம நபா்கள் வழிமறித்து, ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்ாக போலீஸாா் 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
தேனி அருகே உள்ள மின் அரசு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (49). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். தேனி அல்லிநகரத்திலிருந்து ராமகிருஷ்ணனும், அவரது நண்பரும் காரில் மின் அரசு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரில் வந்த நண்பா் போடி விலக்குப் பகுதியில் இறங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவா், தன்னை தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே இறக்கி விடுமாறு கேட்டதால், அவரை ராமகிருஷ்ணன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றாராம். தனியாா் பள்ளி அருகே காா் சென்ற போது, ராமகிருஷ்ணனின் காரை பின்தொடா்ந்து மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள், ராமகிருஷ்ணனின் காரை வழிமறித்து அவரைக் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டினாா்களாம்.
அப்போது, ராமகிருஷ்ணனுடன் காரில் வந்த நபா், அவரது காரில் வைத்திருந்த ரூ.7.50 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதாகவும், மா்ம நபா்களும் அவா்கள் வந்த காரில் போடி சாலையில் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையங்களுக்கு ராமகிருஷ்ணன் தகவல் அளித்தாா். வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் போடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து, போடி சாலையில் காரில் சென்ற 7 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.