கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
வழிப்பறி வழக்கில் மூவா் கைது
தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் ராமகிருஷ்ணன் (49). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் கடந்த புதன்கிழமை மா்ம நபா்கள் தனது காரை வழிமறித்து தன்னிடமிருந்து ரூ.7.50 லட்சத்தை வழிப்பறி செய்து, போடி சாலை வழியாக காரில் தப்பிச் சென்றதாக ராமகிருஷ்ணன் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தினா்.
இந்தச் சம்பவம் குறித்து ராமகிருஷ்ணனிடம் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தியதில், தேனி அருகேயுள்ள சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மகன் ஆண்டவா் (48) என்பவரிடம் பழைமையான தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி, அன்னஞ்சியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுந்தரேசன் (28) என்பவா் தன்னை காரில் அழைத்துச் சென்று, மா்ம நபா்கள் உதவியுடன் தன்னிடமிருந்து ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்றதாகக் கூறினாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஆண்டவா், சுந்தரேசன், விஜயகுமாா் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.