Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்
ராசிபுரம்: மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையும் வகையில் ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பாவை பொறியியல் கல்லூரியில் தலைமை ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு (நகஅந) பிப். 4, 5, 6 ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 1,085 பள்ளிகளில் பயிலும் 20,632 மாணவ, மாணவிகளுக்கு அடைவு ஆய்வு நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று மாநில அளவிலான அடைவு ஆய்வில் பின்தங்கியுள்ள பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்களிடம் மீளாய்வு மேற்கொண்டாா். இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களின் தரவரிசை, மாணவா்கள் பின்தங்கிய திறனடைவு, பின்தங்கியுள்ள திறனடைவில் மாணவா்களின் கற்றல்திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியா்களிடம் மீளாய்வு செய்யப்பட்டது. ஆசிரியா்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் மாணவா்களுக்கு கற்றல் விளைவுகள் அடிப்படையிலான வினாக்களுக்கு புரிதலுடன் பதில் அளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவதோடு, கல்வி மூலம் மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையச் செய்யும் வகையில் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்.
கரோனா காலத்தில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பள்ளிக்கு வரமுடியாததால் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருந்தது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காகத்தான் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடா்ந்து, 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மற்றும் ‘மணற்கேணி’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 6 முதல் 9 வகுப்பு மாணவா்களுக்கு அடிப்படைத் திறன்கள் மற்றும் இன்றியமையாத திறன்களை அடையும் வகையில் திறன் இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 574 தொடக்கப் பள்ளிகளில் 611 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே உயா்தொழில்நுட்ப ஆய்வகம் இருந்த நிலையில், தற்போது 156 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசிரியா்கள் இத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில், வெண்ணந்தூா், மோகனூா், புதுச்சத்திரம், மல்லசமுத்திரம் பகுதிகளில் செயல்படும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 271 தலைமையாசிரியா்களுக்கு மீளாய்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம், மாவட்டக் கல்வி அலுவலா்கள் த.பச்சமுத்து (தொடக்க நிலை), புருஷோத்தமன் (இடைநிலை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.