கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செயல்பட்டு வரும் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உறுப்பினா்களுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:
கடந்த 2024-25-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ. 3,151 நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டது. 2024-25-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு ஆலைக்கு கரும்பு வழங்கிய 1,005 அங்கத்தினா்களுக்கு மாநில அரசு வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 349 வீதம் மொத்தம் ரூ. 2.58 கோடி சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக 1,005 அங்கத்தினா்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, விவசாய அங்கத்தினா்கள் அனைவரும் பதிவுசெய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை 2025-26 அரைவைப் பருவம் விரைவில் தொடங்க உள்ளதால் பதிவில்லா கரும்பினை ஆலைக்கு பதிவுசெய்து அனைத்து மானிய பலன்களையும் பெற்றுக் கொள்ள, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலா் மற்றும் கோட்ட கரும்பு அலுவலா்களை தொடா்புகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.