குடிநீா் கோரி கிராம மக்கள் மனு
நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை ஊராட்சி மக்கள் குடிநீா் பிரச்னை தொடா்பாக மனு அளித்தனா்.
அந்த மனு விவரம்: மரப்பரை ஊராட்சியில் உள்ள எங்கள் குடியிருப்பில் 40 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். குடிநீா் வசதிக்காக 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் மேல்நிலை குடிநீா் தொட்டி நிரப்பப்பட்டாலும், எங்கள் பகுதிக்கு 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீா் விடப்படுகிறது. மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விடப்படுகிறது.
இதனால், குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வுகாண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.