ஆடி வெள்ளி! பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!
தஞ்சை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முக்கிய சக்தி தலமாக விளங்கும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள துர்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேணுபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரப் பதிகம் பெற்ற முக்கிய சக்தி தலமாகவும் விளங்குவதுடன் சோழர்களின் காவல் தெய்வமாகவும் விளங்கியது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்தில் அதிகாலை நான்கு மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று துர்க்கை அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மேலும் உற்சவர் துர்கை அம்மன் சன்னதியில் ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தி வருகின்றனர்.