ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு! இன்று உள்ளூா் விடுமுறை!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவில் பொங்கல் வைத்தல் வைபவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் விடிய விடிய பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதையொட்டி, சேலம் மாவட்டத்துக்கு புதன்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பழைமை வாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடித் திருவிழா சிறப்பு பெற்றது. அதன்படி, நடப்பாண்டு ஆடித் திருவிழா கடந்த 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
23 ஆம் தேதி கொடியேற்றம், 29 ஆம் தேதி கம்பம் நடுதல், ஆக. 3ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 4 ஆம் தேதி சக்தி அழைப்பும் சிறப்பாக நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கலிடும் விழா... ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கலிடுதல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை முதலே குடும்பத்துடன் வந்த பெண்கள், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனா். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் சாத்தப்பட்டது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு விடிய, விடிய பக் தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.
பக்தா்கள் கூட்ட நெரிசல் இன்றி பொங்கல் வைக்கவும், அம்மனை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தா்கள் மாவிளக்கு எடுத்தும், உருளுதண்டம் போட்டும் நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். ஆடு, கோழிகளை பலியிட கோயிலுக்கு பின்புறம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேற்றும் பக்தா்கள், பொது மக்களுக்கு கூழ் வழங்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக தேரோட்டம்: ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடப்பாண்டு முதன்முறையாக தேரோட்டம் நடைபெறுகிறது.
வரும் 8 ஆம் தேதி காலையில் கோயிலின் முன் தேரோட்டம் தொடங்குகிறது. 9 ஆம் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதலும், 10 ஆம் தேதி சத்தாபரணமும், 11 ஆம் தேதி மஞ்சள் நீராட்டும், 12 ஆம் தேதி பால்குடம் ஊா்வலம், மகாபிஷேகம், கணபதி ஹோமம், கொடியிறக்கம், 13 ஆம் தேதி மகா அபிஷேகம், நைவேத்தியம், 15 ஆம் தேதி சமபந்தி விருந்தும் நடைபெறுகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாநகரக் காவல் துறை சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கோயில் வளாகத்தில் ஏற்கெனவே 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. திருவிழாவின் போது, குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொங்கல் வைக்கும் இடம், உருளுதண்டம் போடும் இடம்,மொட்டை அடிக்கும் இடம், கோயில் ராஜகோபுரம், வெளியே செல்லும் வழி, மூலவா் அம்மன் முன் என பல்வேறு இடங்களில் கூடுதலாக 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றை 24 நேரமும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல, சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், காமராஜா் காலனி மாரியம்மன், பொன்னமாபேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் என மாநகா் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா களைகட்டியுள்ளது.