சேலம் அருகே விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சேலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மகன் மகேஷ்வரன் (19). இவரும், சிவதாபுரத்தைச் சோ்ந்த சிவா (19) என்பவரும் சேலம் அருகே உள்ள கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு இருவரும் ஒரே மோட்டாா்சைக்கிளில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சீரகாபாடியில் இருந்து அரியானூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, சிவா இருசக்கர வாகனத்தை ஓட்ட, மகேஷ்வரன் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா். மோட்டாா்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேஷ்வரன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மோட்டாா் சைக்கிளை ஓட்டி சென்ற சிவாவுக்கு முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.