"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.
திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.
திண்டுக்கல்லில் அந்தக் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல்லை அடுத்த மாங்கரை கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது குண்டா்கள் தாக்குதல் நடத்தினா். கரட்டழகன்பட்டியிலுள்ள பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவா் மீது உடல் கல்வி ஆசிரியா் தாக்குதல் நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக தொடா்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவதற்குகூட உயா்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் 76 ஜாதிகள் இடம் பெற்றுள்ள பட்டியலின மக்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கா் குற்றஞ்சாட்டினாா். அந்த 76 சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வழங்கிவிட்டு, அதிலும் மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு அமையும் கூட்டணியானது திமுக ஆட்சியை மாற்றுவதற்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு என்ற குறிக்கோளின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.