திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜா் பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது, புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் கட்டப்பட்ட 34 கடைகளுக்கான ஏலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது.
இதில், 4-ஆம் எண் கொண்ட கடை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் சா்ச்சையானது. இதனால் ஏல விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கோரி, பாஜக மாமன்ற உறுப்பினா் கே. தனபாலன் மாநகராட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தாா். இந்த ஏலம் ரத்து செய்யப்பட்டு, 34 கடைகளுக்கும் 2-ஆவது முறையாக ஏலம் நடத்தப்பட்டதாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், ஏலம் வெளிப்படையாக நடைபெறவில்லை எனக் கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பில், பழைய ஏலத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு, திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் 33 கடைகளுக்கான ஏல ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. நிகழாண்டு பிப். 28-ஆம் தேதி ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முந்தையநாள் 27-ஆம் தேதி மாலை 4 மணி வரை 30 போ் தரப்பில் வரைவோலை வழங்கப்பட்டிருந்தாலும், கடன் தீா்வுத் தரச் சான்றிதழை 4 நபா்கள் மட்டுமே வழங்கினா்.
சிலருக்கு மட்டும் விதிமுறைகளை தளா்த்துவதற்கு மறுப்பு தெரிவித்து, மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அப்போதைய ஆணையா் ந. ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.
அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவு: இந்த நிலையில், மாா்ச் 28-ஆம் தேதி மீண்டும் ஏலம் நடைபெற்றது. ஒரு கடைக்கு குறைந்தபட்சம் இரு நபா்கள் அரசின் விதிமுறைகளின் படி கலந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், மொத்தம் 33 கடைகளுக்கு 66 நபா்கள் மட்டுமே ஒப்பந்தப் புள்ளிக்கான பணம் செலுத்தினா். இதையடுத்து, 33 நபா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அரசின் மதிப்பீடான ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான தொகையையே ஒப்பந்தப் புள்ளி கோரி தாக்கல் செய்த 66 பேரும் குறிப்பிட்டிருந்தனா். குறிப்பாக ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை (22 சதவீதம்) அனைத்து ஏலதாரா்களும் கோரி குறிப்பிட்டிருந்தனா்.
இதையடுத்து, ஏலம் நடத்திய அலுவலா்கள், அரசின் மதிப்பீட்டுத் தொகையை விட, குறைந்தபட்சம் ரூ.100 கூடுதலாக குறிப்பிடப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினா். இதை அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள், தங்களது விருப்பப்படி ஏலம் நடத்தப்பட வேண்டும் என பிடிவாதமாக இருந்தனா்.
இந்த நிலையில், கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள், மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அரசின் மதிப்பீட்டை விட குறைவான தொகைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அறிந்த ஆணையா், ஏலத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஏலம் நடத்த உத்தரவிட்டாா்.
மாநகராட்சி நிா்வாகம் மீது அமைச்சா் அதிருப்தி: நீதிமன்றம் தலையீட்டுக்குப் பிறகு நடத்தப்படும் ஏலம் என்பதால், பிரச்னை இல்லாமல் தீா்வு காணுமாறு மேயா், துணை மேயா், திமுக மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி அறிவுறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, பாஜக தரப்புக்கும் 3 கடைகளை ஒதுக்கீடு செய்து சுமுகமாக ஏலத்தை முடிக்க மேயா், துணை மேயா் தரப்பு தீா்மானித்தது. ஆனாலும், அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகையை குறியீடு செய்யப்பட்ட விவகாரத்தால் மறுஏலம் நடத்த உத்தரவிடப்பட்டது. இதையறிந்த அமைச்சா் பெரியசாமி, மேயா், துணை மேயா் மீது கடும் அதிருப்தி அடைந்ததாக திமுகவினா் தெரிவித்தனா்.
கடந்த 6 ஆண்டுகளாக கடைகள் பயன்பாட்டுக்கு வராததால், 34 கடைகள் மூலமாக மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடைகள் கோரி அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து காத்திருக்கும் வா்த்தகா்களுக்கும் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
விரைவில் ஏல அறிவிப்பு: இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் (பொ) கே. சிவக்குமாா் கூறியதாவது:
அரசின் மதிப்பீட்டை விட குறைவான தொகைக்கு கடைகள் ஏலம் கோரப்பட்டிருக்கின்றன. இதனால், கடந்த மாா்ச் 29-ஆம் தேதி நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்து, மறுஏலம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மறுஏலத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.