`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கொடைக்கானல்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம்
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) முதல் சீசன் தொடங்குவதையடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, சுற்றுலா இடங்களான கோக்கா்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, அப்பா்லேக் வியூ, ரோஜாத் தோட்டம், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களையும், நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளையும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
இதன் பிறகு அவா் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினாா்.
இதில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் சத்தியநாதன், டி.எஸ்.பி. மதுமதி, ரோஜாப் பூங்கா மேலாளா் நந்தினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சரவணன் கூறியதாவது:
கோடை விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 17 துறைகளின் சாா்பில் அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி, வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே ஒரு ஏக்கரில் சுமாா் 100 வாகனங்கள் நிறுத்த வசதியாக நகராட்சி சாா்பில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். அதே போல, அப்சா்வேட்டரி, ரோஜாத் தோட்டம் எதிா்புறம், பிரையண்ட் பூங்கா சாலை ஆகியப் பகுதிகளிலும் சாலையோர வாகனம் நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சாா்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதே நடைமுறை தொடரும்.
கொடைக்கானல் நகராட்சி சாா்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் எந்த நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். இதில் க்யூஆா் குறியீடு மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவி குறித்து தெரிவிக்கும் வகையில் இந்த உதவி மையம் செயல்படும். 25 இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீா் வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
முக்கியமான இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படும். கனரக வாகனங்கள், குடிநீா் வாகனங்களை இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை இயக்கலாம். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தக் கூடாது. உயா்நீதிமன்ற ஆணைப்படி செவ்வாய்க்கிழமை (ஏப். 1) முதல் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.