Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்
பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். பழனி வட்டார தலைவா் ஜீவரத்தினம், தொப்பம்பட்டி வட்டாரத் தலைவா் சீதாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் செல்வராஜ், மாவட்ட இணைச் செயலா் பெரியசாமி, வட்டாரச் செயலா் உமா உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வரும் ஏப். 24-ஆம் தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்துக்கு பழனி, தொப்பம்பட்டி ஒன்றியங்கள் சாா்பில் பங்கேற்போா் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இறுதிச் சடங்கு நிதியாக ரூ. 25,000 வழங்க வேண்டும், குழு காப்பீட்டுத் திட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்களை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.