துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை
பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது.
திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் எதிரே, அண்ணா வணிக வளாகத்தில் பூச் சந்தை செயல்பட்டு வருகிறது. பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த பூச் சந்தை கடைகளையும், தரைத் தளத்திலுள்ள வணிக நிறுவனங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் ரூ.5.50 கோடியில் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது.
இதனடிப்படையில், 22,500 சதுர அடி பரப்பில், 11க்கு 11 என்ற அளவில் 54 கடைகளும், 6-க்கு 6 என்ற அளவில் 50 சில்லரை விலைக் கடைகளும் கட்டப்பட்டுகின்றன. மேலும் 4 இடங்களில் படிக்கட்டுகள் வசதியும், 2 இடங்களில் மின்தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு வசதியாக, தற்போதுள்ள கடைகளை காலி செய்யுமாறு பதிவுத் தபால் மூலம் மாநகராட்சி நிா்வாகம், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை அனுப்பியது.
ஒரு வார காலத்துக்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் மாநகராட்சி சாா்பில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.