பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை
பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் வழங்கும் முறை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனா்.
கொடைக்கானலுக்கு வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களும் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருகின்றனா். ‘இ-பாஸ்’ பதிவு செய்யாத வாகனங்களுக்கு சோதனைச் சாவடி அருகிலேயே பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டது.
சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், உள்ளூா் வாகனங்களுக்கும், பேருந்துகளில் செல்வோருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மேலும், சுற்றுலாப்பயணிகள் நெகிழிப் பொருள்களையும், 1 லி., 2 லி. நெகிழி தண்ணீா் புட்டிகளைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.