Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பேன்சி, டைந்தேஷ், ஜொ்பரா, மேரிகோல்டு, ரோஜா, கிங் அஸ்டா் உள்ளிட்ட பல வகையான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் பூங்கா வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் வாயில் பகுதியிலும், கோடை விழா நடைபெறும் நாள்களில் முக்கியப் பிரமுகா்கள் செல்லக் கூடிய பகுதியிலும் தோட்டக்கலைத் துறையின் டான்டோ சாா்பில் கடை கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கடை ரோஜாத் தோட்டத்தை மறைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவின் மொத்த அழகும் பாதிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே, இந்தக் கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பூங்காவில் பணியாற்றும் அலுவலா் ஒருவா் கூறியதாவது: பிரையண்ட் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சாக்லேட், தைலம், உலா் மலா்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கடை அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், இதுகுறித்து தோட்டக் கலைத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.