ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது
வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் பாகாயத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து ஒன்று காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். 9.30 மணி அளவில் மக்கான் சிக்னல் சந்திப்பு பகுதியில் வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
தொடா்ந்து, பேருந்து நிற்காமல் முன்னால் நின்றிருந்த பயணிகள் ஆட்டோ மீதும் வேகமாக மோதியதுடன், அதே வேகத்தில் அந்த ஆட்டோவின் முன்னால் நின்றிருந்த 2 காா்கள் மீதும் மோதி சிறிது தூரம் தள்ளி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 3 பயணிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து நடந்தவுடன் பேருந்து ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். அவா் மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாக பயணிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேருந்து ஓட்டுநரான அணைக்கட்டு அடுத்த ஊசூரைச் சோ்ந்த ரவிச்சந்திர ன்(33 ) என்பவரை கைது செய்தனா்.