ஆண்டுதோறும் ஜன.24-இல் ஓட்டுநா்கள் தினம்: போக்குவரத்து சங்கங்கள் முடிவு
ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
பல்வேறு மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு), அகில இந்திய பேருந்து மற்றும் மகிழுந்து இயக்கங்களின் கூட்டமைப்பு (பிஓசிஐ) மற்றும் அனைத்திந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.
நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றும் ஓட்டுநா்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில், முதலாவது ஓட்டுநா் தினம் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதாக போக்குவரத்து சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீண்ட பணி நேரம், சேதமடைந்த சாலைகள், குறைந்தளவிலான நலத்திட்டங்கள் உள்ளிட்ட சிக்கல்களால் ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
இந்தியாவில் 15 லட்சம் தனியாா் பேருந்துகளும் மாநில போக்குவரத்து கழகங்களின்கீழ் 1.5 லட்சம் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 7 கோடி போ் இதில் பயணம் மேற்கொள்கின்றனா்.