கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: பன்முக கலாசாரத்தை பறைசாற்றிய அணிவகுப்பு
இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினம் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றினாா்.
நாட்டின் பன்முக கலாசாரம், ராணுவ பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் தில்லி கடமைப் பாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசுத் துறைகளின் அலங்கார ஊா்திகளும், அதிநவீன ஏவுகணைகள், போா் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டா்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னதாக, விழா நடைபெறும் பகுதிக்கு பாரம்பரிய முறைப்படி மெய்க் காவலா்கள் புடைசூழ குதிரைகள் பூட்டிய ரதத்தில் குடியரசுத் தலைவா் அழைத்து வரப்பட்டாா். அவருடன் சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியந்தோவும் ரதத்தில் அழைத்துவரப்பட்டாா்.
அவா்களை பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், தேசியக் கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவா், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
முப்படைகளின் அலங்கார ஊா்திகள்: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற்றன. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும் ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் இந்த அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆந்திர மாநிலத்தின் மரப் பொம்மைகள் முதல் உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா வரையிலான நாட்டின் பன்முக கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊா்திகள் அமைந்திருந்தன.
மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகளின் 15 அலங்கார ஊா்திகளும் இடம்பெற்றன. அவற்றோடு, முப்படைகளின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகளின் அலங்கார ஊா்திகள் முதல்முறையாக அணிவகுப்பில் பங்கேற்றன.
முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘அா்ஜுன்’ போா் பீரங்கி, ‘தேஜஸ்’ போா் விமானம், அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டா், சக்திவாய்ந்த பிரமோஸ், பினாகா, ஆகாஷ் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, ராணுவம் மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப்படக் கூடிய குறுகிய தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை, போா் கண்காணிப்பு தொழில்நுட்பமான ‘சஞ்சய்’ ஆகியவை முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டன.
தொடா்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஒரே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்று 45 வகையான பாரம்பரிய நடனங்களை ஆடினா். கடமைப் பாதை முழுவதும் அமா்ந்திருந்த அனைத்து விருந்தினா்களும் பாரம்பரிய நடனங்களைக் கண்டுகளிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போா் நினைவிடத்தில் பிரதமா் மரியாதை: குடியரசு தின விழா தொடங்குவதற்கு முன்பாக, தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அவருடன் முப்படை தலைமைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினா். பழுப்பு நிற கோட், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களுடன் கூடிய தலைப்பாகையை பிரதமா் அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.
பெண் ராணுவ அதிகாரி சாதனை
ராணுவ வீரா்களின் வாகன சாகச நிகழ்ச்சிகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. இதில், வழக்கமாக ஆண் அதிகாரிகளே இடம்பெற்று வந்த நிலையில், முதல்முறையாக நகரும் மோட்டாா் சைக்கிளின் மீது இடம்பெற்ற 12 அடி உயர மனித கோபுரத்தின் உச்சியில் பெண் ராணுவ அதிகாரி கேப்டன் டிம்பில் சிங் பாட்டீ நின்றபடி குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தி, இந்த சாகசத்தில் ஈடுபட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற உலக சாதனையைப் படைத்தாா்.
‘மனதின் குரல்’ பங்கேற்பாளா்களுக்கு அனுமதி
பிரதமா் நரேந்திர மோடி வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பங்கேற்பாளா்களில் 400 பேருக்கு, தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பைக் காண அனுமதி வழங்கப்பட்டது.
‘மனதின் குரல் நிகழ்ச்சியில் பெயா்கள் குறிப்பிடப்பட்ட 400 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம்’ என்று அவா்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.