ஒரே நாடு ஒரே நேரம்: வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துகேட்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூா்வ மற்றும் வா்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 14-ஆம் தேதி வரை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் கருத்து கேட்கவுள்ளது.
தொலைத்தொடா்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என தேச உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சட்டபூா்வ வானிலை (ஐஎஸ்டி) வரைவு விதிகள், 2024 வெளியிடப்பட்டது.
இது அதிகாரபூா்வ, வா்த்தக, நிதி, நிா்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் ஐஎஸ்டியை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது. ஐஎஸ்டி தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஐஎஸ்டியை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வானியல், கடற்பயணம், அறிவியல் ஆய்வு உள்பட குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விதிகளை பல்வேறு துறைகளும் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்யப்படவுள்ளது. விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் துல்லியமான நேரத்தைக் கணக்கிட்டு வெளியிடும் பணியை மேற்கொண்டு வருகிறது.