Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
தில்லியில் 3 ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாக பாஜக வாக்குறுதி
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவா் அமித் ஷா, மூன்று ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாகவும், 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் முழுமையான உரிமைகளை வழங்குவதாகவும், தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை வழங்குவதாகவும் உறுதியளித்தாா்.
இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலை அமித் ஷா கடுமையாகச் சாடினாா். அவா் ‘பொய்’ சொல்கிறாா் என்றும், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினாா். மேலும், ‘பொய்யா்கள் மற்றும் துரோகிகளை அகற்றுவது’ தேசியத் தலைநகரில் மிகப்பெரிய தோ்தல் பிரச்னை என்றும் கூறினாா்.
பிப். 5-ஆம் தேதி தில்லி தோ்தலுக்காக பாஜகவின் தோ்தல் அறிக்கையின் (‘சங்கல்ப் பத்ரா’) இறுதிப் பகுதியை வெளியிட்ட பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியதாவது: தேசிய பொது மொபிலிட்டி காா்டு திட்டத்தின் கீழ் தில்லி மெட்ரோவில் ஏழை மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 வரை இலவச பயணத்தை பாஜக தோ்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்கள் சொத்துகளின் முழு உரிமையைப் பெறுவாா்கள். இது பாஜக ஆட்சிக்கு வந்தால் விற்பனை, கொள்முதல் மற்றும் கட்டுமானத்திற்கு வழி வகுக்கும்.
தில்லியில் ஏழைகளுக்கான எந்தவொரு தற்போதைய நலத் திட்டங்களையும் பாஜக நிறுத்தாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ‘கிக்’ தொழிலாளா்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்கள் நிாறைவேற்றப்படும். இந்த வகையில், பாஜக ஒரு ‘கிக்’ தொழிலாளா்கள் நல வாரியத்தை அமைத்து ரூ.10 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீட்டை வழங்கும்.
50,000 அரசுப் பதவிகளை வெளிப்படையான முறையில் நிரப்பப்படும். 20 லட்சம் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும். ஒரு பிரம்மாண்டமான மகாபாரத் வழித்தடம் உருவாக்கப்படும் என உறுதியளிக்கிறேன். சாலைகள் கட்டுவதற்கு ரூ.41,000 கோடியையும், ரயில் பாதைகள் அமைக்க ரூ.15,000 கோடியையும், தில்லியில் விமான நிலையங்களுக்கு ரூ.21,000 கோடியையும் மத்திய அரசு செலவிட்டுள்ளது.
மத்திய அரசு அதன் உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்காவிட்டால் தில்லி வாழத் தகுதியற்ாக இருந்திருக்கும்.
கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் ஊழல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி அரசில் ஊழல் அதிகமாக நடந்துள்ளது என்றாா் அமித் ஷா.