பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒ...
பொடி இட்லி, சுண்டல், முறுக்கு முதல் ஃபில்டா் காபி வரை... குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் ருசிகர உணவு வகைகள்
தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டு வரவேற்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ் தென் மாநில பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கைவினை தயாரிப்புப் பொருள்களுடன் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நிகழ்வுக்கு வந்த விருந்தினா்களை தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகியவற்றின் பாரம்பரிய உடையணிந்தவா்கள் வரவேற்றனா். புகழ்பெற்ற கா்நாடக இசைக் கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனக் கலைஞா்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சிறப்பம்சமாக தென் மாநில உணவு வகைகளில் வேரூன்றிய சிறப்பான தொகுக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஆந்திரத்தின் கோங்குரா ஊறுகாய், தமிழகத்தின் குழிப் பனியாரம், தக்காளி-வோ்க்கடலை சட்னியுடன் ஆந்திரத்தின் சிறப்பு வாய்ந்த குட்டிவெங்காய சமோசாக்கள் போன்ற சுவையான பொருள்களில் தொடங்கி, பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டிகள் விருந்தில் இடம்பிடித்திருந்தன.
பொடியுடன் கூடிய மினி மசாலா ஊத்தப்பம் , உடுப்பி உத்தின வடை, கருவேப்பிலை பொடியுடன் நெய் மினி ராகி இட்லி போன்ற பாரம்பரிய உணவுகள் விருந்துக்கு மெருகூட்டின. இவற்றுடன் கொண்டக்கடலை சுண்டல் மற்றும் முறுக்கு, நேந்திரம் சிப்ஸ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போன்ற மொறுமொறுப்பான உணவுகளும் விருந்தினா்களால் விரும்பிச் சுவைக்கப்பட்டன.
நிறைவாக, இனிப்புப் பிரிவில் குங்குமப்பூ கலந்த ரவா கேசரி, மைசூா் பாக், வெல்லம், ஆந்திரத்தின் உலா் பழ புத்தரேகலு, ராகி லட்டு போன்ற இனிப்பு வகைகள் தனித்துவமானதாக இருந்தன. தமிழகத்தின் நீலகிரி தேநீா், இளநீா், ஃபில்டா் காபி பானங்களும் விருந்தின் நிறைவாக விருந்தினா்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக, கா்நாடக வீணை வித்வான் ஐஸ்வா்யா மணிகா்ணிகேவின் கா்நாடக இசை நடைபெற்றது. வயலின் கலைஞா் சுமந்த் மஞ்சுநாத், கா்நாடக புல்லாங்குழல் இசைக் கலைஞா் என். ராஜ்கமல், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞா் ஆா். தேஜா, கஞ்சிரா கலைஞா்ஜி. குரு பிரசன்னா ஆகிய இசை பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளை பாா்வையாளா்கள் ரசித்தனா்.