பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவ...
ஆந்திரம்: கோயில் சுவர் இடிந்து 7 பேர் பலி
விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கோயில் மேற்கூரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவத்தில் இறைவனின் நிஜரூப தரிசனத்தைக் காண புதன்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
சிம்மகிரி பேருந்து நிலையத்திலிருந்து சாட் சாலையில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே ரூ.300 டிக்கெட் வரிசையில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், இரவு முழுவதும் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கோயில் சுவர் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதில், அப்பன்சுவாமியை நிஜரூப தரிசனத்தில் வழிபடுவதற்காக காத்திருந்த பக்தர்களில் 7 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில அதிகாரிகள் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் இரங்கல்
கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த ஏழு பக்தர்கள் இறந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
ரூ.25 லட்சம் நிவாரண நிதி
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அறக்கட்டளைத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அவுட்சோர்சிங் வேலை வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மூன்று பேர் கொண்ட குழு விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ரேவந்த் ரெட்டி இரங்கல்
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியும் இரங்கல் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
இரவு முழுவதும் பெய்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாகவே கோயில் சுவர் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் வி. அனிதா செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், நாங்கள் அனைவரும் மழையில் நனைந்தோம். சம்பவத்தின் போது தான் கோயிலில் இருந்ததாகவும், நான் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், சம்பவம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்தினேன்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மீட்பு நடவடிக்கையில் எந்த தாமதமும் இல்லாமல் விரைந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
அமைச்சர் ராமநாராயண ரெட்டி இந்த துயரச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
இதனிடையே, ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் மிகுந்த வருந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பக்தர்கள் இறந்தனர்.