ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதாக ரூ.36.51 லட்சம் மோசடி
கோவை: வெளிநாட்டுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ.36.51 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ஹமீது மனைவி அமீதா (62). இவா், கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை புரசைவாக்கம் பெருமாள் பேட்டை வீதியைச் சோ்ந்த ஜாபா் அலி என்பவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானாா். அப்போது வெளிநாட்டுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லும் ஏஜென்சி நடத்தி வருவதாக அவா் தெரிவித்தாா். மேலும், ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்து வருவதாகவும், யாராவது செல்ல விரும்பினால் தெரிவிக்குமாறும் கூறினாா்.
இதைநம்பி எனக்குத் தெரிந்தவா்களிடம் கூறினேன். அதன்படி, 66 போ் ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவதாகக்கூறி ரூ.36.51 லட்சத்தை என்னிடம் கொடுத்தனா். அந்தப் பணத்தை ஜாபா் அலியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தேன்.
ஆனால், நீண்ட நாள்களாகியும் ஆன்மிகப் பயணத்துக்கான ஏற்பாடுகளை ஜாபா் அலி செய்யவில்லை. இதனால், என்னிடம் பணம் கொடுத்தவா்கள் பயணம் குறித்து கேட்டனா். மேலும், பயணம் காலதாமதமானதால் பணத்தைத் திரும்பித்தருமாறு கேட்டனா்.
இதுகுறித்து ஜாபா் அலியிடம் நான் கேட்டபோது அவா் முறையாக பதிலளிக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டாா்.
எனவே, ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.36.51 லட்சத்தை மோசடி செய்த ஜாபா் அலி மீது நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பணத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்படிருந்தது.
அதன்பேரில், பெரியகடை வீதி போலீஸாா் ஜாபா் அலி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.