``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்ப...
ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவுள்ளதாக அந்நாட்டில் வதந்தி பரவியது. இதனையடுத்து, பாகிஸ்தானில் ஒருமணி நேரமாக வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக, கராச்சி பங்குச் சந்தை (KSE 100), வியாழக்கிழமையில் 6,948.73 புள்ளிகள் குறைந்து (6.32%) சரிவுடன் முடிவடைந்தது.
சிமெண்ட், எரிசக்தி, வங்கி, தொழில்நுட்பம் போன்ற முக்கிய பங்குகளின் எதிர்மறை விளைவுகளினால் பாகிஸ்தான் பங்குச் சந்தை சரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இன்றுமுதல் (மே 8) 60 நாள்களுக்கு விலைமதிப்பற்ற உலோகங்கள், நகைகள், கற்கள் (Gemstones) போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியதால், இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தானில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களின் பங்குகளை திரும்பப் பெற்றதால், அந்நாட்டு பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, தனது அந்நியச் செலாவணி இருப்புகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, மேற்கு ஆசியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுமெனில், அவற்றில் 90 சதவிகித பரிமாற்றம் இந்தியாவைச் சேர்ந்த பரிமாற்ற நிறுவனங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நீடித்தால், இந்த நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.