ஆபரேஷன் சிந்தூர்: வெளிநாட்டு ஊடகங்களை விமர்சித்த அஜித் தோவல்!
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட வெளிநாட்டு ஊடக நிறுவனங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.
நிகழ்வில் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெறும் 23 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. அந்த முகாம்கள் எல்லையில் இருப்பது அல்ல. பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் உள்ளவை.
பாகிஸ்தான், இந்தியாவில் நுழைந்து தாக்கியது, அதைச் செய்தது, இதைச் செய்தது என்று பாகிஸ்தான் ஊடகங்களும் வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. அவர்கள் ஒரு சாட்டிலைட் புகைப்படத்தையாவது செய்திகளில் காட்டினார்களா? ஆனால், நாம் பாகிஸ்தானை தாக்கிய ஆதாரங்களை உலகிற்கு காட்டினோம். நாம் ஏற்படுத்திய பல சேதாரங்களை இன்னும் நாம் முழுமையாக வெளியில் சொல்லவில்லை.
இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை.
பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தொழில்நுட்பத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். சிறந்த கல்வி, தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது" என்று பேசியுள்ளார்.