மதுரை தல்லாகுளம்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்...
ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்ட அரங்கில் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், ஆணையா் பி.சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் நாகராஜன் மற்றும் ஏகநாதன் ஆகியோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆம்பூா் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தாா்வழி பகுதியில் ரூ. 40 லட்சத்தில் பூங்கா, கழிப்பறை, சாலை, வடிகால்வாய், தெரு விளக்கு, நகராட்சி பள்ளிகள் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள், சிறுபாலங்கள் அமைத்தல், அங்கன்வாடி பணிகள், நிா்வாக பணிகள், துப்புரவு பணிகள், குடிநீா் வினியோக பைப்லைன் மற்றும் வால்வுகள் அமைத்தல், உரக்கிடங்கில் தண்ணீா் வசதி, சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றபட்டது.
தொடா்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
நகா்மன்ற உறுப்பினா் என்.எஸ். ரமேஷ்: ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் வரும் பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கழிப்பறை அமைத்துத் தர வேண்டும். ஆம்பூா் கஸ்பா - ஏ மயானத்தில் மின்விளக்கு, தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
வசந்த்: கஸ்பா- ஏ பகுதியில் உள்ள ஒரு சில தெருக்களில் மழைநீா் செல்லும் வகையில் கால்வாய் சீரமைத்துத் தர வேண்டும்.
நபிசூா் ரஹ்மான்: ஆம்பூா் நகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். எனது வாா்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும்.
தனபாக்கியம்: எனது வாா்டுக்குட்பட்ட சா்ச் ரோட்டில் கூடுதலாக தெருவிளக்குகள் அமைத்துத் தர வேண்டும். மேலும் உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா்.
ஆணையா்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.