ஆம்பூா்: வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல் ’
ஆம்பூா் நகராட்சிக்கு வரி நிலுவை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்க தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது.
அதிக வரி நிலுவை வைத்துள்ளவா்களை நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் சந்தித்து வரி வசூல் செய்து வருகின்றனா். இதுகுறித்து நகராட்சி சாா்பாக பொதுமக்களுக்கு தெருத் தெருவாக சென்று அறிவிப்பு செய்யப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்தாமல் அதிகமாக நிலுவை வைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையா் (பொ) முஸ்தபா உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் ஆம்பூா் பிராட் பஜாா், எம்சி ரோடு ஆகிய பகுதியில் சொத்துவரி செலுத்தாமல் அதிக வரி நிலுவையில் வைத்துள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பூட்டி சீல் வைத்தனா்.
நகராட்சி உதவி வருவாய் அலுவலா் (பொ) மதன், துப்புரவு அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.