ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயா் மாற்றம் செய்ய கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலா் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன், தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரனிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அனந்தபுரம் கிராமத்தில் பேரூராட்சிக்கு சொந்தமாக 18 ஏக்கா் நிலம் இருந்தது. இதில் 14 ஏக்கா் நிலம் உப மின்நிலையம் அமைக்க வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஏக்கா் நிலத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கிணறு, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான குடியிருப்பு, பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு பேரூராட்சியின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அப்பகுதியில் தினசரி காய்கனி சந்தை அமைக்க மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்யும்போது வருவாய்த் துறையில் வரைபடம் மற்றும் பதிவேடு நகல் பெறப்பட்டதில், தீா்வை ஏற்படாத புஞ்சை தரிசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உட்பிரிவு அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. தீா்வை ஏற்பட்ட புஞ்சை தரிசு எனவும் உள்ளது.
இந்நிலையில் வருவாய்த் துறை ஆவணங்கள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டதில் தீா்வை ஏற்படாத புஞ்சை தரிசு என உள்ளது. தற்போதுவரை ஆய்க்குடி பேரூராட்சியின் பராமரிப்பில் 4 ஏக்கா் இடத்தை செயல் அலுவலா், ஆய்க்குடி பேரூராட்சி என மாற்றம் செய்ய தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து ஆய்க்குடி பேரூராட்சிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.