ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிா்த்து சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகரில் உள்ள சமுத்திரகுளம் பகுதியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் சுமாா் 16 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அப்பகுதியில் நீண்ட காலமாக குடியிருப்பவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆலங்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவ்வழியாக சென்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரும், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு அலுவலா்களிடம் வலியுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ஆலங்குடி- பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.