Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் மணிகண்டன், சிதம்பரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 15 லட்சம் கடன் பெற்றாா். இதில், ரூ. 5 லட்சம் மட்டும் திருப்பித்தர வேண்டியிருந்த நிலையில், அவா் கால அவகாசம் கேட்டதை பழனிச்சாமியின் உறவினா்கள் ஏற்றுக்கொள்ளாமல், கடந்த ஜூன் 30-ஆம் தேதி, மணிகண்டனின் தந்தை நடராஜனை, பழனிச்சாமியின் அண்ணன் சக்திவேல் உள்ளிட்ட 5 போ் கடத்திச் சென்று தாக்கியதுடன், நடராஜனின் கைவிரலை துண்டித்து துன்புறுத்தினா்.
இதுதொடா்பாக கடலூா் மாவட்டத்தை சோ்ந்த சக்திவேல், பாண்டியன், பன்னீா்செல்வம், மரியா செல்வராஜ், தேவநாதன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் பாண்டியன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவா் மீது சிதம்பரம் அண்ணாமலை நகா் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா்.
இந்நிலையில் தொடா் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் பாண்டியன் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பரிந்துரை செய்ததன்பேரில், பாண்டியனை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா்.