கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கிறீர்களா? சேமிப்பு, முதலீடு, வீடு வாங்குவது... எ...
இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் 131-ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் திருத்தலத்தில் பங்கு இறைமக்கள் சாா்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுறையுடன் திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை திருத்தலத்தில் சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் பங்கேற்று திருவிழா திருப்பலி நிறைவேற்றினாா். மாலை நிறைவு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினாா்.
இதில் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல அருள்பணியாளா்கள், பங்குத் தந்தைகள் பங்கேற்றனா். பின்னா், திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின் விளக்கு ரத பவனியை சூசைமாணிக்கம் தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவா்கள் இதில் பங்கேற்றனா். திருத்தலத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் மின் விளக்கு ரதம் பவனி வந்தது.
சனிக்கிழமை (ஜூலை 5) திருத்தலத்தில் நற்கருணை பவனி நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளா் ஜான் வசந்தகுமாா் உள்ளிட்ட பங்கு இறைமக்கள், இடைக்காட்டூா் சமூக முன்னேற்ற சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்தனா்.
