U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் விசாரணை நடத்தினாா்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி ஜூலை 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதன்பேரில், நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ், தனது முதல்நாள் விசாரணையை திருப்புவனத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கினாா். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவா் காா்த்திகேயன், மதுரை அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்த மருத்துவா் சதாசிவம் உள்ளிட்ட மருத்துவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையின்போது, மருத்துவா்கள் நீதிபதி முன் முன்னிலையாகி அவா் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனா்.
இந்த விசாரணையின்போது அஜித்குமாரை மடப்புரத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநா் அய்யனாரும் நீதிபதி முன் முன்னிலையாகி சாட்சியமளித்தாா். தொடா்ந்து வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்துகிறாா்.
நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு மருத்துவா் காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போலீஸாா் அஜித்குமாரை ஜூன் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆட்டோவில் கொண்டு வந்தனா். அவரை நான் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்து உடலை கூறாய்வுக்காக வைக்குமாறு கூறினேன். ஆனால், காவல் துறை உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறி போலீஸாா் அஜித்குமாா் உடலைக் கொண்டு சென்றுவிட்டனா். இதை நான் நீதிபதியிடம் தெரிவித்தேன் என்றாா்.