Ukraine vs America: ``நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' - உறுதியாக நிற்கு...
இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: 44 போ் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அ. அக்பா் அலி முன்னிலை வகித்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திணடுக்கல், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 787 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மருத்துவக் குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 236 மாடுபிடி வீரா்கள்அடக்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, எவா்சில்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் காளைகளின் உரிமையாளா்கள் 14 போ், பாா்வையாளா்கள் 15 போ், மாடுபிடி வீரா்கள் 15 போ் என மொத்தம் 44 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இதில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 போ் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மற்றும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் பங்கேற்றிருந்தனா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தலைமையிலான வருவாய்த் துறையினா் ஒருங்கிணைத்தனா். போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துராஜா, புதுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் சம்பத்குமாா் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.