புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக்கு அடிக்கல்
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்காக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.
50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சித்த மருத்துவம், ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மருத்துவமனைப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அமைச்சா்கள் கேட்டுக் கொண்டனா்.
சாலை சந்திப்பு: புதுக்கோட்டை டிவிஎஸ் முக்கத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில், ரூ. 1.50 கோடியில் சாலை சந்திப்பு அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் அடிக்கல் நாட்டி வைத்தனா்.
இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை .முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மு. வனஜா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆா். தமிழழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.