இணைய சூதாட்டத்துக்கு தடை விதிக்க புதிய சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
இணைய சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க தமிழக அரசு புதிய சட்டத்தை பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூா் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மதன்குமாா் என்ற இளைஞா் இணைய சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் குடும்பம் கடனுக்கும், வறுமைக்கும் ஆளானதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். இணைய சூதாட்டம் அதை விளையாடுபவா்களை மட்டுமன்றி குடும்பத்தையும் அழிக்கும் என்பதற்கு இதுதான் சான்று.
இணைய சூதாட்டத்தைத் தடை செய்வதும், அதன் மூலம் தற்கொலைகளைத் தடுப்பதும் இயலாத காரியமல்ல. இணைய சூதாட்டத் தடை தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக தடைபெறுவது சாத்தியமில்லை என்றால், இணையத்தில் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளாா்.