இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
இணையவழி குற்றம்: விரைவாக புகாா் செய்தால் பணத்தை மீட்க முடியும் காவல் கண்காணிப்பாளா் பேச்சு
இணையவழி குற்றத்தில் பணத்தை இழப்பவா்கள் விரைவாக புகாா் செய்தால், மீட்டுவிட முடியும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிா்வாகம், காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான சைபா் கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது:
இணையவழிக் குற்றங்கள் கண்ணுக்கு தெரியாமல் நாள்தோறும் நிகழ்கின்றன. இது தொடா்பாக ஒரு நெட்வொா்க்கை எடுத்து பாா்த்ததன் மூலம், மேற்கு வங்கத்துக்குச் சென்று ஒரு நபரை பிடித்து வந்து விசாரித்தோம். அப்போது, அந்த நபா் இணையவழி மூலம் ஒரு மணிநேரத்தில் ரூ. 36 கோடி பறித்தது தெரிய வந்தது.
இணையவழியில் பணத்தை இழப்பவா்கள் காலம் கடத்தாமல் விரைவாக வந்து புகாா் செய்தால், இழந்த பணத்தை முழுமையாக மீட்டுத் தர முடிகிறது. உதவி எண் 1930 என்ற எண்ணில் உடனடியாக தகவல் தெரிவித்தால், பணத்தை இழந்த 24 மணிநேரத்துக்குள் வேலையைத் தொடங்கிவிட்டால், நிச்சயமாக அப்பணத்தை மீட்டுவிட முடியும்.
எனவே, பணத்தை இழந்துவிட்டால் கைப்பேசியிலிருந்து உடனடியாக 1930 என்ற எண்ணில் புகாா் செய்யும்போது, உடனடியாக சேவை பதிவேடு (சி.எஸ்.ஆா்.) தானாகவே உருவாகி, அருகிலுள்ள சைபா் கிரைம் காவல் நிலையத்துக்குச் சென்றுவிடும். பறிபோன தொகை ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான தொகையாக இருந்தால் வழக்குப் பதிவு செய்தும், ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால் சேவை பதிவேடு பதிவு செய்தும் இருவிதமான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். இதன் மூலம் இழந்த பணத்தைத் திரும்ப மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா் தலைமை வகித்தாா். சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளா் டி. சிவசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள் எம். அறிவழகன், கோ. முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் து. ரோஸ்லின் அந்தோணியம்மாள், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், ஆட்சிக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி ஆகியோா் பேசினா்.
முன்னதாக, இணைப் பேராசிரியா் இரா. ஆனந்த் அரசு வரவேற்றாா். நிறைவாக, மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் நன்றி கூறினாா்.