சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சிற்றுந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் சிற்றுந்துக்கான கட்டணத் திருத்தம் வருகிற மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத தடத்தின் நீளம் சாலையின் மொத்தத் தட நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருக்கக் கூடாது. சிற்றுந்து சேவை தொடங்கும் புள்ளி, முனையப்புள்ளி என்பது இதுவரை பேருந்து சேவை செய்யப்படாத குடியிருப்பு, கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூா்வமாக அளித்து அனுமதி சீட்டை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ. ஏற்கெனவே பேருந்து வசதி இல்லாத தடமாக இருக்க வேண்டும்.
அரசாணையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்து இயக்க புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை தொடா்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள், பேருந்து உரிமையாளா்கள் ஆகியோா் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.