லஞ்சம் பெற்ற வழக்கில் ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம் பெற்ற வழக்கில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாலா (59) தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பிரிவில் பணி செய்து வந்தாா். இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு டிச. 20-இல் துவரங்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அணைக்காடு டி.இ.எல்.சி. பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கு சத்துணவு அமைப்பாளா்களாகப் பணிபுரிந்த ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாள், ரெஜினாமேரி ஆகியோரிடம் விசிட்டிங் நோட்டில் குறைகள் எழுதாமல் இருக்க வேண்டுமானால் தலா ரூ. ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டாா். அப்போது டி.இ.எல்.சி. பள்ளி சத்துணவு அமைப்பாளா் ரெஜினாமேரி தன்னிடம் ரூ.500 தான் இருக்கிறது என்று கூற, அதனை மாலா பெற்றுக்கொண்டாா். மேலும் ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாளிடம் தலா ரூ. ஆயிரம் தர வற்புறுத்தினாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாள் ஆகியோா் தஞ்சாவூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாரின் அறிவுரைப்படி ஜோஸ்பின் இந்திரா யுவராணி லஞ்சம் கொடுத்தபோது, மாலாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இதுகுறித்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் முன்னாள் நோ்முக உதவியாளா் மாலாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரமும் அபராதமும் விதித்தாா். அபராதம் கட்டத் தவறினால் 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.